Download Android and iOS apps

Click icon to download from Google Play Store



* Privacy Policy for Android
Click icon to download from Apple App Store



* Privacy Policy for iOS
உலகில் பல்வேறு பாடத்திட்டங்களில் மாணாக்கர் சரளமாக தமிழ் படிக்க சில முறைகள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் மிக எளிதான முறையை 32 அட்டைகளில் உருவாக்கியர் பொள்ளாச்சி நசன் ஐயா. கடந்த 12 ஆண்டுகளில் பல்வேறு முறைகளை பயன்படுத்திய தனிப்பட்ட அனுபவத்தில் சீராக வரிசைப்படுத்தி, தமிழ் சரளமாக படிப்பதில் உள்ள சிக்கல்களை சிறப்பாக பயிற்றுவிக்கும் முறை நசன் ஐயா உருவாக்கியது.

பொதுவாக தமிழ் எழுத்துகளை பயிலும் புலம் பெயர்ந்த மாணாக்கர் அனைத்து உயிர்மெய்யெழுத்துகளையும் பயில இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அதிலும் முழுமையான படிக்கும் திறனை அடைவதில்லை. இதன் காரணமாக மாணாக்கரின் எழுதும் திறனும் புதிய சொற்களை பிழையின்றி படிக்கும் திறனும் பின் தங்குவதால் அவர்களின் தமிழ் கற்றல் திறன் மேம்பட நீண்ட காலம் எடுக்கிறது.

நசன் ஐயாவின் 32 அட்டைகள் இந்த இடைவெளியை சீர் செய்கிறது. 32 மணி நேர முயற்சியில் தமிழை சரளமாக படிக்க முடியும் என்றால் அது மிகையில்லை, எந்த ஒரு செய்தித்தாள் செய்தியையும் பிழையின்றி படிக்க இயலும். கிரந்த எழுத்துகள் இதில் இடம்பெறவில்லை, அதனை தனியாகவே கற்பிக்க வேண்டும்.

ட்ட, ப்ப, த்த, ற்ற போன்ற இரட்டிக்கும் எழுத்துகளை படித்தல், ட மற்றும் த எழுத்துகள் வரும் சொற்களை சரியாக கேட்டல், படித்தல், எழுதுதல் போன்ற நடைமுறை சிக்கல்களை 32 அட்டைகளின் வரிசை சீர் செய்கிறது. வேறு எந்தப் பாடத்திட்டத்திலும் இல்லாத ஒரு பெரும் வேறுபாடு, இதுவரை பயின்ற எழுத்துகளை மட்டும் பயன்படுத்தி சொற்கள் உருவாக்குவது நசன் ஐயாவின் 32 அட்டைகளில் மட்டும்தான் உள்ளது, நான் அறிந்தவரையில்.

32 அட்டைகளை இலவயமாக PDF வடிவத்தில் நசன் ஐயா உலகம் முழுவதும் பகிர்ந்துள்ளார். அவரின் இணையத்திலும் உள்ளது www.thamizham.net. கையளவில் முழு வண்ணத்தில் அச்சடிக்கப்பட்ட கையேடு பத்து இந்திய உரூபாய்க்கும் (Rs.10) கொடுக்கிறார்.

அட்டைகளில் மட்டும் உள்ள பாடமுறையை கற்பிக்க ஆசிரியர் தேவை, அதனை தானே பயிலக்கூடிய அளவில் ஏன் ஒரு செயலியாக உருவாக்கக்கூடாது என்ற சிந்தனை ஓராண்டிற்கு முன்பு தோன்றியது. இதன் முதன்மை நோக்கம் எழுத்துகளின் முறையான் உச்சரிப்பு, சொற்களின் உச்சரிப்பு, எழுத்துகளை எழுதும் முறைகள் இவற்றை எல்லாம் செயலியில் கொண்டு வந்தால் உலகில் எவரும் சரளமாக தமிழ் படிக்கலாம். எட்டு மாத முயற்சிக்குப் பின் Android செயலி இன்று வெளியாகியுள்ளது. iOS செயலியும் 99% வேலைகள் முடிந்து விட்டது இன்னும் இரு வாரங்களுக்குள் வெளியிடப்படும்.

இந்தச் செயலியை உருவாக்க அனைத்து எழுத்துகளுக்கும் சொற்களும் குரல் பதிவு செய்து உதவிய முனைவர் ந. இராசேந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி. தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கிய மினசோட்டா திரு. ஆம்ப்ரோஸ் அவர்களுக்கும் மிக்க நன்றி. செயலியை 6 மாதங்களுக்கும் மேலாக சளைக்காமல் பரிசோதிக்க உதவிய அனைத்து மினசோட்டாத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

செயலியை உருவாக்க 8 மாதங்களுக்கும் தொடந்து உழைத்த திரு. செளமியன் (www.thulirsoft.com) மற்றும் அவரின் நிறுவன மென்பொறியாளர்கள் குறிப்பாக திருமதி. பாண்டியம்மாள் ஆகியோருக்கும் உளமார்ந்த நன்றிகள்.

இந்தச் செயலி எந்த வயதினரும் பயன்படுத்தக் கூடிய கல்விச் செயலியாக வெளிவருகிறது. எந்தவிதமான விளம்பரங்கள் இல்லாமலும் பயன்பாட்டாளரின் சொந்த விவரங்கள் எதையும் சேகரிக்காமலும் இச்செயலி வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செயலியை தொடந்து மேம்படுத்த உள்ளோம், தற்பொழுது ஆங்கிலம் வாயிலாக மட்டும் பயில வழியுள்ளது, இதனை உலகின் அனைத்து மொழியின் வாயிலாகவும் கற்க அடுத்த வடிவம் வெளியிடப்படும்.

இதற்கான பொருளுதவி மற்றும் திட்ட மேலாண்மை செய்ததில் நிறைவான மகிழ்ச்சி. இதற்கு இசைந்த நசன் ஐயா அவர்களுக்கு மீண்டும் நன்றிகளுடன்
மா.சிவானந்தம்
மினசோட்டாத் தமிழ்ப்பள்ளி